பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் அர்ப்பணிப்புடன் கூடிய பொது சேவைக்கு முன்னுதாரணமாக மிளிர வேண்டும் என்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ. எல். அதிசயராஜ் தெரிவித்தார்.
1969 இல் பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் உருவாக்கப்பட்டது. சிறப்பாக இயங்கி வந்த நிலையில் நாட்டு சூழல் காரணமாக யுத்த காலத்தில் செயல் இழந்தது.
இந்நிலையில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் இதற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
நடப்பாண்டு தலைவர் வீ. தவராசா மற்றும் செயலாளர் அ. கமலநாதன் ஆகியோர் அடங்கலான நிர்வாகத்தின் பகீரத முயற்சியில் கடந்த புதன்கிழமை மாலை மன்றத்தின் புனருத்தாரண விழா இடம்பெற்றது.
பொத்துவில் முதல் மட்டக்களப்பு வரை இருக்க கூடிய நூற்று கணக்கான அங்கத்தவர்கள் இதில் பங்கேற்றனர். இதன் ஆரம்ப கால தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் அதிசயராஜ் சம்பிரதாயபூர்வமாக மன்றத்தின் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.
பின்னர் உரையாற்றிய இவர் பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றத்துக்கு சொந்தமாக காணி உள்ளது, மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை உறுப்பினர்கள் உள்ளனர் போன்ற அம்சங்கள் சிறப்பானவைதான், ஆனால் இம்மன்றம் பொது பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும், ஏனைய அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும், இதுவே மிக பெருமைக்குரிய விடயமாக இருக்க முடியும் என்றார்.
