விவசாயிகளின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசிதீர்க்க கடமைப்பட்டுள்ளேன்-மைத்திரி

நான் பண்டாரநாயக்கவின் கொள்கையை பின்பற்றுபவன் என்பதாலும்-ஓர் விவசாயியின் மகன் என்பதாலும் விவசாயிகளின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசி தீர்த்து வைக்க கடமைப்பட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்-குப்பிளான் பகுதியில் விவசாயிகளை சந்தித்து உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இங்கே இருக்கும் மக்கள் அரசியல்வாதிகளுக்கு மாலையும்,பொன்னாடைகளையும் அணிவித்து வருகின்றனர்.ஆனால் நான் யாழ்பாணம் வந்து ஓர் விவசாய குடிமகனுக்கு மாலை அணிவித்தது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது.இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய கௌரவம்.

இங்கே வயதான விவசாய மக்களின் முகங்களைப் பார்க்கும் போது எனக்கு எனது தந்தையின் முகம் தான் கண் முன்னே வருகின்றது.
நானும் உங்களை போல் ஓர் விவசாயியின் மகன். நானும் எனது தந்தையுடன் விளை நிலங்களில் உழைத்துள்ளேன்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணம் வந்து விவசாயிகளது பிரச்சனைகளை கேட்டறிந்தது ஞாபகம் இருக்கின்றது.
விவசாயிகளின் வேதனை மற்றும் பிரச்சனைகள் எனக்கு நன்றாக புரியும்.எமது விவசாயத்திற்குரிய வசதி வாய்ப்புக்கள் கிடைத்தால் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு விவசாயிகளுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.நான் ஜனாதிபதியாக இருக்க முன்னர் 5வருடங்கள் விவசாய அமைச்சராக இருந்தேன்.அப்போது யாழ்ப்பாண விவசாய நிலங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.

உங்கள் நிலத்தின் கீழ் எண்ணெய் படிவு உள்ளது.நிலத்தின் கீழ் குடிநீருக்கு உகந்தது அல்லாத இரசாயனம் இருப்பது எனக்குத் தெரியும்.இவ்வாறான பிரச்சனைகள் இருந்தும் நீங்கள் முடிந்தளவு விவசாயம் செய்கிறீர்கள்.

இங்கே உள்ள விவசாயிகள் ஸ்ரீமாவோ அம்மையார் காலத்தில் இருந்ததை போன்று விவசாயிகள் கௌரவிக்கப்பட வேண்டும் என என்னிடம் கேட்டுள்ளனர்.

ஸ்ரீமாவோ அம்மையார் யாழ் வந்த போது அவரை மக்கள் மரக்கறி மாலை போட்டு வரவேற்றனர்.பண்டாரநாயக்க அம்மையாரின் கட்சியின் தலைவர் நான் தான். இன்றும் அம்மையாரின் கொள்கையைத் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பின்பற்றுகின்றது.
பண்டாரநாயக்கவின் கொள்கையை பின்பற்றுபவன் என்பதாலும் ஓர் விவசாயியின் மகன் என்பதாலும் விவசாயிகளின் பிரச்சனையை ஜனாதிபதி மற்றும் அமைச்சருக்கு தெரியப்படுத்தியும்,பாராளுமன்றத்தில் பேசியும் தீர்த்து வைக்க கடமைப்பட்டுள்ளேன்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.