(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம் (28) புதன்கிழமை காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கின் பிரபல சிவாச்சாரியார் சிவாச்சார்யதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் முன்னிலையில் பல சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக கிரியைகளில் ஈடுபட்டார்கள்.
பக்தர்களின் அரோகரா கோசம் விண்ணைப் பிளக்க பிரதான தூபி க்கான கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் நடாத்தி வைக்க ஏனைய பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகமும் சமகாலத்தில் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோவர்த்தன சர்மா பிரதான கும்பம் தாங்கி உணர்வு பூர்வமாக பக்தர்கள் புடைசூழ வலம் வந்தார்.
கருவறையில் உள்ள வேலுக்கு அபிஷேகம் இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபை தலைவர் ஆறுமுகம் செயலாளர் சிவகுமார் பொருளாளர் தெய்வநாயகம் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் ஏனைய ஆலயங்களின் தலைவர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.