விசேட தேவையுடைய விவசாயிகளுக்கு 1.8மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்கள்

மட்டக்களப்பில் கால்களை இழந்த விசேட தேவையுடைய விவசாயிகளுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்கள் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் வைத்து இன்று (28) வழங்கிவைக்கப்பட்டது.

சர்வதேச ஹென்டிகெப் நிறுவனத்தின் அனுசரணையில் அவுஸ்ரேலியன் எய்ட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 35 விசேட தேவையுடையோர்களுக்கு தலா 50 ஆயிரம் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 09ஆந் திகதி ஹென்டிகெப் அமைப்பினால் கால்களை இழந்த விசேட தேவையுடையவர்களுக்கு செயற்கைக் கால் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது விவசாயத்தில் அதிக ஆர்வமுள்ளவர்களும், வீட்டுத் தோட்டத்தினை மேற்கொள்பவர்களுமான இவ்விசேட தேவையுடையவர்கள் 14 செயலகப் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது அவர்களது விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக விவசாய உள்ளீடுகள், சேதனப் பசளை வகைகள், தெழிகருவிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், நீர்பாய்ச்சும் குழாய்கள், நீத்தாங்கிகள், பாதுகாப்பு வேலிகளுக்கான முற்கம்பிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இதுதவிர இவ்விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் கால்களிழந்த விசேட தேவையுடையவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், செயற்கைக்கால்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய விரிவாக்கல் திணைக்கள பிராந்திய பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா, ஹென்டிகெப் நிறுவனத்தின் நிதிமுகாமையாளர் சாரங்க, ஹென்டிகெப் நிறுவனத்தின் உத்தியோகத்தர் எஸ். கோசல, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி. எஸ். கோனேஸ்வரன், கிழக்கு மாகாண சமூக சேவைத்திணைக்கள மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். அலியார், எஸ். அருள்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.