மடு பக்தர்கள் மத்தியில் சுகாதாரம் தகுந்த முறையில் பேணப்பட வேண்டும்

மன்னார் மாவட்டத்தில் மருத மடு அன்னையின் வருடாந்த ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்கள் மத்தியில் சுகாதாரம் தகுந்த முறையில் பேணப்பட வேண்டும் என மடுவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மடு மாதா ஆலய ஆடிமாதம் 2ந் திகதி நடைபெற இருக்கும் பெருவிழாவை முன்னிட்டு இதற்கான ஆய்த்தக் கூட்டம் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மடுவில் செவ்வாய் கிழமை (27) நடைபெற்றது.

இது விடயமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மடு பொது சுகாதார பரிசோதகர் ஜே.பி.ரெக்ஷன் றொட்றிக்கோ தெரிவிக்கையில்

தற்பொழுது மடு பெருவிழாவை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் இருக்கின்றதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இப்பகுதியில் 21 இடங்களில் நுளம்பு பெருகும் நிலை கண்டறியப்பட்டுள்ளது.

சீமெந்தால் அமைக்கப்பட்ட தண்ணீர் தாங்கி . நீர் சேமித்து வைக்கும் இடங்கள் . மீற்றர் பெட்டியில் . மலசலகூடப் பகுதிகள் மரசருகுகள் போன்ற இவ்வாறான இடங்களில் நுளம்பு குடம்பிகள் இனம் காணப்பட்டுள்ளது.

ஆகவே ஏற்கனவே இப்பகுதியில் சுகாதார நலன் கருதி வெளிப் பகுதியில் புகையூட்டல் செய்வதில் கவனம் செலுத்தப்பட மாட்டாது என கடந்த இது தொடர்பான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் தற்பொழுது நுளம்பு பெருக்கம் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் புகையூட்டல் செய்ய வேண்டிய அவசியம் எற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (60)