கல்முனையில் மறைந்த இலக்கிய ஆளுமைகள் எனும் நூல் வெளியீடு

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த கோவிலூர் செல்வராஜன் எழுதிய ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” எனும் நூல் வெளியீட்டு விழா கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கல்முனை ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் எழுத்தாளர், கா. சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளியீட்டு உரையை வே. அரவிந்தன் நிகழ்த்தியதுடன் நூல் பற்றிய அறிமுக உரையை சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தினார். நூல் பற்றிய வாழ்த்துரையை தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் க.குணராசா நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டதுடன், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்து கொண்டார். நூலில் பதிலுரையை நூலாசிரியர் கோவிலூர் செல்வராஜன் நிகழ்த்தினார். நன்றி உரையை கிராம சேவை உத்தியோகத்தர் எஸ். சுரேஷ் நிகழ்த்தியதுடன் நிகழ்வுகளை பாசம் புவிராஜா தொகுத்து வழங்கினார்.

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வெளியீடாக வெளிவந்து கொண்டிருக்கும் “பரிமாணம்” பத்திரிகையில் வாரம் ஒரு படைப்பாளி என்ற தலைப்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மறைந்த தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பற்றி கோவிலூர் செல்வராஜன் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த எழுத்துக்களால் இலக்கிய பரப்பில் வலம் வந்த ஆளுமையை வெளிப்படுத்திய 47 கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகள் இந்நூலில் வெளிவந்துள்ளது. எமது பிரதேசத்தில் இப்போது இருக்கும் இளைய தலைமுறைக்கு தங்களது முந்தைய தலைமுறை படைப்பாளிகள் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் ஓரளவு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நூலின் பிரதிகள் மறைந்த இலக்கிய ஆளுமைகளின் குடும்ப உறவினர்களுக்கு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. இதில் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், இளம் கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.