தவறுகளை சீர்செய்ய மக்கள் தொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் – குரூஸ் அடிகளார்

மனித செயல்பாட்டிலே எப்பொழுதும் தவறுகள் விடுவது இயல்பாகும். இவ்வாறு நாம் செய்யும் எமது பணிகளிலும் சில சமயங்களில் தவறுகள் எற்படலாம். ஆனால் இவற்றை சீர் செய்து மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் ஸ்தாபகரும் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வருமான அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

சனிக்கிழமை (17) மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றபொழுது இதில் கலந்து கொண்ட அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்

மன்னார் மாவட்டத்தின் மன்னார் துயர் துடைப்ப மறுவாழ்வுச் சங்கத்தின் பொதுக்கூட்டம் இன்று (17) இடம்பெறுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த 38 வருடங்களாக இந்த மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருகின்றது. இது மக்களின் தேவைகளை அறிந்து பலதரப்பட்ட பணிகள் இனம் மதம் வேறுபாடின்றி செய்து வருகின்றது. இதையிட்டு மகிழ்சி அடைகின்றேன் அத்துடன் இறைவனுக்கு நன்றியும் கூறுகின்றேன்.

எமது இந்த நிறுவனத்தை வழிநடத்துகின்ற மன்னார் அரசாங்க அதிபர் , மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் மதத் தலைவர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் உதவிகளைக் கொண்டு இச்சங்கத்தின் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

இச்சங்கம் தொடர்ந்து பல ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நாம் ஆசீத்து நிற்கின்றோம். இச்சங்கத்துக்கான நிதி வளங்கள் குறிப்பிட்ட அளவில் வெளிநாடுகளிலிருந்தும் உதவி செய்து வருகின்றனர்.உதவி செய்யும் யாவருக்கும் நான் நன்றி தெரிவித்து நிற்கின்றேன்.

கடந்த ஓருசில வருடங்களாக அருட்பணி நவரட்ணம் அடிகளார் இச்சங்கத்தை முன்னெடுத்துச் செல்லுகின்றார். இவருக்கு எமது பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகட்டும்.அத்துடன் இவருடன் இணைந்து செயல்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.எந்தவொரு இன்பம் துன்பங்கள் வந்தாலும் நாம் மக்களுக்காக ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.

மனித செயல்பாட்டிலே எப்பொழுதும் தவறுகள் விடுவது இயல்பாகும். இவ்வாறு எமது பணிகளிலும் சில சமயங்களில் தவறுகள் எற்படலாம்.அப்படியிருந்தும் நாம் அவற்றை சீர்செய்து நல்லதாக கொண்டு செல்லப்பட வேண்டும்.எமது பணிகள் நல்ல முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு யாவருடனும் இணைந்து கொண்டு செல்லப்பட வேண்டும் என ஆசீக்கின்றேன்.

எமது இந்த சங்கத்தினர் நாம் செய்யும் இந்த பணியானது இறைவனுக்கு செய்யும் சேவை என முழு மனதுடன் ஈடுபட்டு இந்த சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என ஆசீத்து நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.