டெங்கு நுளம்பை ஒழிக்க புகையூட்டல் இடம்பெறாது. வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகரன்.

( வாஸ் கூஞ்ஞ) டெங்கு நோய் பரவாதிருக்க முன்னைய காலங்களில் செய்தது போன்று மடு திருப்பதி ஆலய வளாகத்தில் புகையூட்டல் செயல்பாடு இடம்பெறாது. நுளம்பு இனம் காணப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகரன் தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்டத்தில் மருதமடு அன்னையின் ஆடி மாதப் பெருவிழாவுக்கு சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் வருகைத்தரலாம் என்ற எதிர்பார்ப்பில் வருகைத் தரும் பக்தர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்றது.

திங்கள் கிழமை (12) நடைபெற்றக் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் , மடு ஆலய பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் உட்பட பலதரப்பட்ட திணைக்களங்களின் முக்கியஸ்தர்கள் இவ்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுகாதார சம்பந்தமாக ஆராயப்பட்டபோது நாட்டில் டெங்கு அபாயம் காணப்படுவதால் நாட்டிலிருந்து பல பாகங்களிலிருந்தும் மடுத்திருப்பதி பெருவிழாவுக்கு மக்கள் கூட்டம் வருகை தர இருப்பதால் நுளம்பை கட்டுப்படுத்தும் சம்பந்தமாக ஆராயப்பட்டது.

இதன்போது மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகரன் இங்கு கருத்து தெரிவிக்கையில்

கடந்த காலத்தைப்போன்று நுளம்பைக் கட்டுப்படுத்த புகையூட்டல் தற்பொழுது உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகையூட்டல் நடவடிக்கை 2022 ஆம் ஆண்டு முதல் நிறுத்தபட்டுள்ளது. இருந்தபோதும் மடுத் திருவிழாவை முன்னிட்டு மடு ஆலயப்பகுதியில் நுளம்பு தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு டெங்கு நோயை பரப்பும் நுளம்பகள் காணப்படும் இடத்தில் மட்டும் தேவையேற்படின் வதிவிடத்தின் உட்பகுதியில் மட்டும் புகையூட்டல் மேற்கொள்ளப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால் வெளிப்பகுதியில் முன்னையது போன்று எக்காரணம் கொண்டு புகையூட்டல் நடைபெறாது என தெரிவித்தார்.

அத்துடன் இவ் திருவிழாவை முன்னிட்டு சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயல்பாடுகளும் வழமைபோன்று நடைபெறும் எனவும் மேலும் தெரிவித்தார்.