மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர் அங்கிருந்து திருப்பலி திருப்பண்டத்தை களவாடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மன்னார் பெரிய கரிசல் பகுதியில் வியாழக் கிழமை (08) இரவு கத்தோலிக்க தேவாலயமான புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிசில் முறையீடு செய்யப்பட்டிருப்பதாவது,
மன்னார் பெரிய கரிசல் பகுதியில் அமைந்துள்ள புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் வியாழக்கிழமை (08) அன்று இரவு ஆலயத்தின் பக்கத்து கதவை உடைத்து இனம் தெரியாத திருடர் உட்புகுந்து அங்கிருந்த திருப்பலியின்போது பாவிக்கப்படும் திவ்விய நற்கருணை வைக்கும் பாத்திரமான திருப்பண்டத்தை களவாடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தையும் திருடுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டிருந்தபோதும் அது கைகூடாதமையால் உண்டியல் பணம் திருடப்படவில்லை.
இவ் ஆலயத்தில் இவ்வாறான சம்பவம் அடிக்கடி இடம்பெற்று வருவதுடன் இனம் தெரியாதோர் ஆலயத்தை சேதப்படுத்துவதும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.