புளொட் பொறுப்பாளர் நெடுமாறனுக்கு மரண தண்டனை.

வவுனியா பொது வைத்தியசாலை மகப்பேற்றுவியல் நிபுணர் வைத்திய கலாநிதி முகமட் சுல்தான் மீரா முகைதீன், வவுனியா தனியார் வைத்தியசாலை வெளிவாசலில் வைத்து 20.04.2009 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் புளொட் இயக்கப் பொறுப்பாளர் நெடுமாறன் என அழைக்கப்படும் சிவநாதன் பிரேம்நாத் என்ற எதிரியை கொலை குற்றவாளி என தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா தனியார் வைத்தியசாலை உரிமையாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தனது சாட்சியத்தில், கொலை செய்யப்பட்ட மகப்பேற்றுவியல் நிபுணர் தனது வைத்தியசாலையில் மாலை நேர கடமையை புரிந்து விட்டு 6.30 மணியளவில் புறப்பட்ட போது வெளிவாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட்சியமளித்தார். சம்பவ இடத்தில் கைத்துப்பாக்கியின் வெற்று தோட்டக்கள் நான்கு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் புலனாய்வு அதிகாரி சாட்சியம் அளித்தார்.

எதிரியான புளொட் பிரதேச இராணுவ பொறுப்பாளர் நெடுமாறனை கைத்துப்பாக்கியுடன் கைது செய்ததாக இராணுவ உத்தியோகத்தர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.  நெடுமாறனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கியால் தான் வைத்திய கலாநிதி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு வெற்று தோட்டாக்கள் சுடப்பட்டுள்ளதாகவும், அவை ஒத்து செல்வதாகவும் இரசாயன பகுப்பாளர் மடவள நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சாட்சியமளித்துள்ளார்.

அத்துடன் இது துப்பாக்கிச்சூட்டு காயங்களால் ஏற்படுத்தப்பட்ட மரணம் என பிரேத பரிசோதனை செய்த வைத்திய கலாநிதி சாட்சியம் அளித்துள்ளார். எனினும் எதிரி, எதிரிக்கூண்டில் நின்று, தான் புளொட் இயக்க பிரதேச அரசியல் பொறுப்பாளர் எனவும், தனக்கு துப்பாக்கி தரப்படுவதில்லை என்றும் வாக்குமூலம் அளித்ததை நம்பகத்தன்மை அற்ற வாக்குமூலம் என நீதிபதி நிராகரித்து எதிரியை கொலை குற்றவாளி என தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்துள்ளார். மேலும் அவர் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு எதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.