டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அரசாங்கமும் டெங்கினைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம் எம்.இஸ்ஸடீன் தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டல்களின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக அண்மையில் பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களில் பாரிய சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மாணவர்களினதும், அரச ஊழியர்களினதும் பங்கேற்புடன் இதனை வெற்றிகரமாக முன்னெடுத்தோம். குறிப்பாக பொதுமக்களும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலை துப்புரவு செய்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் அவர்கள் மிகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

டெங்கினைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் சுகாதாரத் துறையினர் டெங்கு ஒழிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், பொது அறிவித்தல்கள், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றனர். சுகாதாரத் துறையினரால் மாத்திரம் ஒருபோதும் டெங்கினைக் கட்டுப்படுத்த முடியாது அதற்கு பொதுமக்களும் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.