மன்னார் பிரதேச சபையில் இருக்கும் தீயணைக்கும் வாகனத்தை மன்னார் நகர சபைக்கு மாற்றி அவற்றை உடன் செயற்படுத்தும் நிலையில் வைத்திருக்குமாறு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமை (30) மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இதன் தலைவர் அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றபோதே இது தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்திற்கான தீயணைப்பு வாகனம் பெற்றுக் கொள்வதற்கான விடயம் ஆராயப்பட்டபோது இங்கு கருத்து தெரிவிக்கப்படுகையில்
மன்னார் பிரதேச சபையில் தீயணைக்கும் வாகனம் ஒன்று காணப்படுகின்றது.
இது மன்னார் பிரதேச சபையில் பாவிக்கப்படாத நிலையில் இருப்பதால் இதனை மன்னார் பிரதேச சபை மன்னார் நகர சபைக்கு வழங்குவதற்கு எழுத்து மூலம் சம்மதம் வழங்கியுள்ளது.
ஆனால் மன்னார் நகர சபையில் இதற்கான ஆளணி பற்றாக்குறையாக காணப்படுகின்றது.
இந்த ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுமாகில் இவ்வாகனத்தை மன்னார் நகர சபைக்கு மாற்றுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ள முடியும்.
மன்னார் பிரதேச சபையில் இருக்கும் இந்த தீயணைக்கும் வாகனம் பூரணப்படுத்தப்பட்ட வாகனம் என சொல்ல முடியாது. தீயணைக்கச் செல்ல நேரிட்டால் இவ்வாகனத்துக்குப் பின்னால் தண்ணீர் பவுசர் ஒன்றும் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.
மன்னார் பிரதேச சபையிலும் மன்னார் நகர சபையிலும் ஆளணியற்ற நிலையிலேயே இந்த தீயணைக்கும் வாகனம் காணப்படுகின்றது என இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இவ்ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டமையால் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உடன் வடக்கு மாகாண பிரதம செயலாளருடன் தொடர்புக் கொண்டு இந்த தீயணைக்கும் வாகனத்துக்கு மன்னார் நகர சபைக்கு ஆளணி வழங்கி அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மன்னார் நகர சபைக்கு மேலும் 14 வெற்றிடங்கள் காணப்படுவதால் அவற்றையும் நிவர்த்தி செய்யும்படி மன்னார் நகர சபை செயலாளர் இச்சந்தர்பத்தில் கேட்டுக் கொண்டார்.