புதிய ஆளுநரின் வருகை மூவின மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது – ஜெயசிறில்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் வருகை கிழக்கில் உள்ள மூவின மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அவரது நல்ல செயற்பாடுகள் அனைத்திற்கும் நாம் பக்கபலமாக நிற்போம்.

புதிய ஆளுநரின் மனிதாபிமான நிவாரண உதவியை வழங்கி வைத்து உரையாற்றிய காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் சீனாவின் அனுசரணையூடான மனிதாபிமான உலர் உணவு நிவாரண பொதிகளை கணவனை இழந்த தாய்மார்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்(25) காரைதீவில் இடம் பெற்றது .

சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கல் நிகழ்வில் முன்னாள் தவிசாளர் மேலும் உரையாற்றுகையில்.

கடந்த 33 வருடங்களாக மாறிமாறி வந்த ஆளுநர்கள் தமிழ் மக்களின் உரிமைகளோடு விளையாடியதை நாங்கள் மறக்கவில்லை. தொல்பொருள் என்ற ரீதியிலும் பொது தேவை என்ற ரீதியிலும் தமிழ் மக்களின் காணிகள் நிலங்கள் சூறையாடப்பட்ட வரலாறு இருந்தது அது மாத்திரமல்ல அதிகாரிகள் மட்டத்திலும் தான்தோன்றித்தனமாக நடக்க அது வழிவகுத்தது.

இன்று மூவின மக்களாலும் நேசிக்கப்படுகின்ற முதல் தமிழராக செந்தில் தொண்டமானவர்கள் வருகை தந்து ஒரு வார காலத்துக்குள் இந்த நிவாரண பொதிகள் வசதி குறைந்த ஏழைகளுக்கு வழங்கப்படுவது உண்மையிலேயே வரவேற்ப்புக்கு உரியது. இது நல்லதொரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அவரோடு இணைந்து நல்ல பணிகளுக்கு நாங்களும் கரம் கோர்ப்போம் . முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண் நல்லவர்களோடு நல்ல விடயங்களுக்காக என்றும் பயணிக்கும் என தெரிவித்தார்.

22 விதவை தாய்மார்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
தாய்மார்கள் ஆளுநருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.