ஜூன் 21யை கனடா இனப்படுகொலை தினமாக இலங்கை அனுஸ்டிக்க வேண்டும்

ஜூன் 21ம் திகதியை கனடாவின் இனப்படுகொலை தினமாக இலங்கை அனுஸ்டிக்கவேண்டும் என இலங்கையின் நாடாளுமன்றில் முன்மொழிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இருப்பினும் அதனை எவரும் வழிமொழியவில்லை.

பூர்வீக மக்களுக்கு எதிராக கனடா இனப்படுகொலை செய்வதாக குற்றம்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று இந்த முன்மொழிவை மேற்கொண்டார்.கடந்த காலங்களில் கனடாவில் பல செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.எனவே ஜூன் 21ஆம் திகதியை கனடாவின் இனப்படுகொலை தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை நாடாளுமன்றத்தின் ஆதரவை வீரவன்ச கோரினார்.

ஜூன் 21 ஆம் திகதியை கனேடியர் தேசிய பழங்குடியினர் தினமாக அங்கீகரித்துள்ள நிலையிலேயே விமல் வீரவன்சவின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.மே 18 ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுஸ்டிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே வீரவன்ச இந்த முன்மொழிவை சபையில் சமர்ப்பித்தார்.

முன்னதாக தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா நிறுத்தாது என்று கூறியிருந்தார்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்,மேலும் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று ட்ரூடோ தெரிவித்திருந்தார்.