பசில் ராஜபக்ச போன்ற ஒருவரை வெட்கமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக்கியமையே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் செய்த பாரிய தவறு என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், டொலர் பிரச்சினை ஏற்பட்டபோது, இது ஓரிரு பணப் பரிவர்த்தனைக்காரர்களின் பிரச்சினை. இதனை நான் ஒருவாரத்தில் சரி செய்வேன் என பசில் கூறினார்.
வெட்கமும், பயமும் இல்லாது பசில் போன்ற ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமையே அப்போதைய அரசாங்கம் செய்த முதல் தவறு எனவும் தெரிவித்தார்.
சவேந்திர சில்வா, எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ஆலோசனையின்படி செயற்பட்டதை நான் எனது நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இராணுவ தளபதியொருவர் எவ்வாறு எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினரிடம் ஆலோசனைகளை கேட்டு செயற்பட முடியும்? எந்தவிதமான தடைகளுமின்றி சரத் பொன்சேகாவால் மட்டுமே போராட்டக்காரர்கள் மத்தியில் சென்று உரையாற்ற முடிந்தது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, நான் எழுதியப் புத்தகத்தை வெளியிட்டதுமே குழப்பமடைந்த அமெரிக்க தூதுவர், நான் எழுதியது பொய்யென டுவிட் செய்திருந்தார். நான் எழுதியது பொய் என்றால், எதற்கு அமெரிக்க தூதுவர் குழப்பமடைய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.