கல்முனை பேருந்து தரிப்பு நிலையம் குறித்த பொதுமக்களின் கோரிக்கை

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருகின்றது.எனவே கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை புணரமைப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இங்குள்ள பஸ் தரிப்பு நிலைய கூரைகள் இடிந்து விழும் நிலையிலும் புறாக்கள் பாம்புகள் விச ஜந்துக்கள் வாழ்கின்ற வாழ்விடமாகவும் துர்நாற்றம் வீசுகின்ற இடமாகவும் காணப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர பஸ் தரிப்பிடத்துடன் இணைந்துள்ள மலசல கூடம் உடைந்த நிலையிலும் உரிய பராமரிப்பு இன்றியும் காணப்படுகின்றது.மேலும் குறித்த பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள சிறு உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமையினால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் கடந்த காலங்களில் கல்முனை பஸ் நிலையம் சகல வசதிகளுடன் நவீன மயப்படுத்தப்படவுள்ளது என அரசியல்வாதிகள் பல்வேறு அறிக்கைகளை தெரிவித்திருந்தும் கூட இவ்வாறு மக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருகின்றமை உரிய பராமரிப்பின்மையை காட்டுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.