நாட்டில் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்ட சுதந்திரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கமானது மக்களின் அடிப்படை உரிமைகளை அடிக்கடி மீறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்த சுதந்திரம் பெற வேண்டும் எனவும்,மக்களின் அடிப்படை உரிமைகளை மீற முற்படுவதனை எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று (18) இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை பார்க்க இன்று ராகம வைத்தியசாலைக்கு சென்ற போதே எதிர்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்த அரசாங்கம் தேர்தலை தடுத்து, சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மீறுவதாகவும், இவ்வாறான அரசாங்கத்துக்கும் மக்களுடன் நட்பாக செயற்படும் தமது கட்சியில் உள்ள எவருக்கும் ஒருபோதும் தொடர்பில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.