எம்.என்.எம். யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.
பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் குறித்த இனங்கள் தங்களுக்கான கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்வது அவர்களின் உரிமையாகும்.
இவ்வுரிமைகளில் அனாவசியத்தலையீடுகள் ஏற்படுத்தப்படுமிடத்து, இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெற்று இனங்களுக்கிடையிலான சக வாழ்வு, நல்லிணக்கம் பாதிக்கப்படும். இவ்வாறான மோசமான நிகழ்வுகள் நாட்டின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்.
முஸ்லிம் சமூகம் தங்களின் சமய, கலாசாரங்களைப் பின்பற்றுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பல சவால்களை காலத்திற்கு காலம் எதிர்கொண்டு வருவதைப் பார்க்கலாம்.
ஹலால், பெண்களின் ஆடை, விவாக,விவாகரத்து சட்டம் எனப்பல்வேறு விவகாரங்களில் வீணான தலையீடுகளை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காண முடிகிறது.
பேரினவாதிகளால் காலத்திற்கு காலம் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் சீண்டப்பட்டாலும் சிறுபான்மையான ஒரு மொழி பேசும் இரு இனங்களுக்கிடையில் புட்டும் தேங்காய்ப்பூவும் போல நல்லதொரு இணக்கப்பாடான உறவு ஆரம்ப காலங்களில் இருந்தது.
ஆனால், துரதிஷ்டவசமாக விடுதலைப்போராட்டங்கள், ஆயுத போராட்டங்களாக மாறியதன் பின்னர் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல் ஆரம்பித்து இன்று வரை பல்வேறு சந்தர்ப்பங்களின் இணக்கப்பாடு காண வேண்டிய விடயங்களில் முரண்பாடுகளையே தோற்றுவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இன நல்லிணக்கத்திற்காக பிற இனங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து பாதுகாத்த சந்தர்ப்பங்களுமுண்டு. இனவாதமற்ற, சகல இனங்களோடும் ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறுகளும் ஆரம்பம் தொட்டு இன்று வரை இருக்கின்றது.
ஒரே மொழி பேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதோடு பேரினவாதிகளின் இனவாதச் செயற்பாடுகளை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டுமென்பதில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெளிவாகவே செயற்பட்டார்கள்.
அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப்
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இலங்கை ஒலிபரப்பு மற்றும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனங்களில் கடமை புரிந்த தமிழ் பெண்களின் பூவுக்கும் பொட்டுக்கும் ஆபத்து வந்த போது, அதனைப்பாதுகாத்துக் கொடுத்தர்.
கடந்த காலங்களில் திருகோணமலை சண்முகா-அபாயா விவகாரம் சூடுபிடித்திருந்தது. இதுவொரு சிறுபான்மை இனத்தின் ஆடை உரிமையில் இன்னுமொரு சிறுபான்மை இனம் தலையீடு செய்வதாக அமைந்திருந்தது.
இவ்விவகாரங்களில் நடுநிலையோடு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி தீர்வுகளைக் காண வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா? என்ற கேள்வி முஸ்லிம் சமூகத்திடம் எழுந்துதது.
இவ்விவகாரமாக குறித்த பாடசாலையின் அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமையும் இதனை மேலும் வலுக்கச் செய்திருந்தது. இன்னும் குறித்த பிரச்சனை முடிவுக்குவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சமகாலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நியாயமான விட்டுக்கொடுப்போடு பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாது, அரசியல் நோக்கங்களுக்காக, இனவாதக் கருத்துகளைப்பரப்பி இரு இனங்களுக்கிடையிலும் அச்சமான சூழ்நிலையையே தோற்றுவித்திருப்பதும் இன ஒற்றுமைக்கு குந்தகமான செயலாகவே காணப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தன்னுடை ஆரம்பம் தொடக்கம் இன்றுவரை பல்லின சமூகங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்ததால் இன நல்லிணக்கத்தோடும் மனிதாபிமானத்தோடும் பல விடயங்களில் செயற்பட்ட பல சந்தர்ப்பங்களுண்டு. அதில் முக்கிய நிகழ்வொன்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்பிகிறேன்.
இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த ரவூப் ஹக்கீம், தமிழ் மன்றத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அப்போது 1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது தமிழ் மன்றத்தின் தலைவர் என்ற வகையிலும் மனிதாபிமானமுள்ள மனிதன் என்ற அடிப்படையிலும் சட்டக்கல்லூரியில் கல்வி கற்ற தமிழ்ச் சகோதரர்களை பாதுகாக்க வேண்டியது, உதவி செய்ய வேண்டியது தனது தலையாய கடமையெனக்கருதிச் செயற்பட்டார்.
சட்டக்கல்லூரியில் தனது ஜூனியராக இருந்த சிவேந்திரன், நாகேந்திரா என்பவர்களோடு தானும் சேர்ந்து தமிழ்ச்சகோதரர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் உயிருக்கே ஆபத்தான வேலையைப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
தமிழ்ச்சகோதரர்களில் அதிலும் பெண் சகோதரிகள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்று அவர்களை பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற இடங்களிலிருக்கும் பாதுகாப்பான முகாம்களுக்குக் கொண்டு சேர்ப்பதே அவர்களின் முழுநாள் வேலையாக இருந்தது.
இப்படி ஓரிடத்திலிருந்து பம்பலப்பிட்டிக்கு அழைத்துச் செல்லும் போது குறித்த வாகனத்தை குண்டர்கள் ஆயுதங்களோடு வழி மறித்தனர்.
அப்போது, ரவூப் ஹக்கீம் ஏலவே புத்திசாலித்தனமாக உள்ளே இருந்த தமிழ்ப்பெண்களை முக்காடு கோடுமாறு கூறியிருந்தார். அதன்படி அவர்களும் செய்திருந்தார்கள். குண்டர்கள் வாகனத்தை மறித்த சந்தர்ப்பத்தில் ரவூப் ஹக்கீம் சிங்களத்தில் “நாங்கள் முஸ்லிம்கள்” என்றார். இதன் போது அவர்கள் வாகனத்தின் உள்ளேயும் தலையைப்போட்டு பார்த்து விட்டு அவசரமாகப் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு போய்ச்சேருங்கள் எனக்கூறி விலகிக் கொண்டார்கள். இவர்கள் போன உயிர் திரும்ப வந்தது போன்று உணர்ந்தனர்.
ரவூப் ஹக்கீம் உள்ளிருந்தவர்களை திரும்பிப்பார்த்த போது நேற்றி வேர்த்திருந்தது, ஆண் துணையாகச் சென்ற சிவேந்திரன், நாகேந்திரா “ஹக்கீம் இல்லா விட்டால் சரித்திரம் முடிந்திருக்கும்” என்று கூறி நன்றியோடு ரவூப் ஹக்கீமைப் பார்த்தார்கள். இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு நுவரெலியா வரையும் போக வேண்டியும் இருந்தது.
தமிழ் மன்றத்தின் தலைவனல்லவா நான். பயப்பட்டால் தலைவனாக இருக்க முடியாது என்பதை அன்றே ரவூப் ஹக்கீம் உணர்ந்தார்.
இச்சம்பவம் தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு ரவூப் ஹக்கீம் தொடர்பான தப்பான அபிப்பிராயம் கொண்டவர்களுக்கும் அவரின் தலைமைத்துவ ஆளுமையை, துணிவை வெளிப்படுத்துவதையாக அமைந்திருக்கும்.
எனவே, இனியும் வீணான விவதாங்களில் ஈடுபட்டு காலத்தை வீணாக்காது, இது ஒன்றுபடும் நேரம் என்பதனால் அனைவரும் சிந்தித்து பிறர் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து, ஏனைய விடயங்களிலும் உறவைப்பலப்படுத்தும் நோக்கோடு நியாயமான விட்டுக்கொடுப்போடு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகளைக்கண்டு இன ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க முன்வர வேண்டும்.