சுவாமி விபுலானந்தர் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி!  காரைதீவில் கிழக்கு பல்கலை உபவேந்தர் கனகசிங்கம் உரை

( வி.ரி. சகாதேவராஜா)  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் இனமத பேதமற்ற பல் பரிமாண ஆளுமை கொண்ட ஒரு பெருமகான். இவர் நமக்கெல்லாம் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி.
 இவ்வாறு காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 131 வது ஜனனதின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியமும் இணைந்து நடாத்திய சுவாமி விபுலாநந்தரின் 131வது ஜனனதின விழா நேற்றுமுன்தினம் (27) திங்கட்கிழமை  அவர் பிறந்த காரைதீவு மண்ணில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முதன்மை அதிதியாக இலங்கை கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து சிறப்பித்தார். நினைவுப்பேருரையை  தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை  சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி  கி.இரகுவரன்
நிகழ்த்தினார்.
காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் பணிமன்றத்தலைவர்  வெ.ஜெயநாதன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திருமுன்னிலை அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் கலந்து ஆசி வழங்கினார்.
கெளரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர்  சிவ.ஜெகராஜன்,
கிழக்கு பல்கலைக்கழக கட்புல தொழில்  நுட்ப கலைத்துறைத் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம், சுவாமி விபுலாநந்த”நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர்  க.பாஸ்கரன் ஆகியோரும் மற்றும் பல சிறப்பு விசேட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
 அவர் அங்கு மேலும் கூறுகையில்..
 சுவாமிகள் பல ஆளுமை மிக்க சிறந்த பண்புகளை கொண்டிருந்தார்கள். சமய வாதியாக சமூகவாதியாக திகழ்ந்த அவர் தரமான சிறந்த கல்வியலாளராக பரிணமித்திருந்தார் .
அவர் நேர முகாமைத்துவத்தை மிகவும் இறுக்கமாக பின்பற்றியவர். ஒருதடவை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு சென்ற குழுவினர் அவரை அழைத்த பொழுது சரியாக 12 மணிக்கு எனது பாடம் முடியும். 12 ஒன்றுக்கு சந்திக்கின்றேன் என்று சொல்லி பாடம் எடுத்து சரியாக 12.01 இல் சந்தித்ததாக பதிவு கூறுகிறது.
ராமகிருஷ்ண மிஷன் ஒரு துறவியை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக விடுவித்தது என்பது சுவாமி விபுலானந்தர் ஒருவரை தான். அதுவே முதலும் கடைசியும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அத்துணை மேதாவிலாசம் கொண்டவர்.
 இந்த காரைதீவு கிராமத்தில் பிறந்து அகில உலகத்தையே தன் பக்கம் ஈர்த்து சாதனைவீரராக திகழ்ந்தார்.
அவரால் காரைதீவு மட்டுமல்ல கிழக்கு மட்டுமல்ல தமிழினம் மட்டுமல்ல முழு தமிழ் கூறு நல்லுலகமே பெருமைகொள்கிறது.
 அவரை இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். என்றார்.
காரைதீவு கோட்ட மாணவரிடையே நடாத்திய பேச்சு கட்டுரை பாஓதல் சித்திரம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
மன்ற செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரை ஆற்றினார்.