(எம்.ஏ.றமீஸ்)
நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத் திட்டம் அரசாங்கத்தின் மூலம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்திற்கமைவாக பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் நிகழ்வு நேற்று(26) இடம்பெற்றது.
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான 10 கிலோகிராம் பெறுமதியுடைய இரண்டு அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள 27 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 9141 குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நன்மை பெறவுள்ளனர்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சுபைர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஐ.எல். சுபைர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம் அர்சாத், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.றபீக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த பெரும்போக நெற் செய்கையின்போது விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தின் மூலும் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் வேலைத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் நடைமுறை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காரியாலயங்கள் மூலம் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.