(ஏறாவூர் நிருபர் – நாஸர்) மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அமைந்துள்ள சந்தைக்கட்டத்தை மக்கள் பாவனைக்குக்கையளிப்பதற்கு நகர சபைத்தவிசாளர் எம்எஸ். சுபைர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
இச்சந்தைக்கட்டம் கடந்த சுமார் ஆறு வருடகாலமாக நிருமானப்பணிகள் கைவிடப்பட்ட நிலையில் காடுமண்டிக்காணப்படுகிறது.
இந்நிலையில்காணி உரிமையாளர்களுக்கு நகர சபையினால் மாதாந்தம் 56 ஆயிரத்து ஐந்நூறு ரூபாவினை வாடகையாகச்செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபூர்வ ஆயுட்காலம் முடிவடைகின்ற ஏறாவூர் நகர சபையின் 60 ஆவது சபை அமர்வின்போது சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது எதிர்ப்பினைவெளியிட்டனர்.
சபை அமர்வு தவிசாளர் எம்எஸ். சுபைர் தலைமையில் இன்று 17.03.2023 நடைபெற்றது. இங்கு பொதுச்சந்தைக்கட்டம் தொடர்பான பிரேரணையொன்றினை சபை முதல்வர் முன்வைத்தார்.
இங்கு சபை தவிசாளர் உரையாற்றுகையில் — பொதுச்சந்தைக்கான கட்டடத்தை புதிதாக அமைப்பதற்கு பல கோடி ரூபா மதிப்பீடு செய்யப்பட்டபோதிலும் பத்துக்கோடி ரூபா நிதி மாத்திரம் ஒதுக்கீடு செய்யபப்ட்ட நிலையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் மேலதிக நிதி ஒதுக்கீடு கிடைக்காததனால் நிருமானப்பணிகள் கடந்த ஆறு வருடகாலமாக கைவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்நிலையில் காணி உரிமையாளர்களான ஆற்றங்கரைப்பள்ளிவாயல் மற்றும் ஓட்டுப்பள்ளி வாயல் ஆகிய மத ஸ்தலங்களுக்கு நகர சபையின் மக்கள் வரிப்பணத்திலிருந்து இதுவரை சுமார் நாற்பத்தைந்து இலட்சம் ரூபா நிதி வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சந்தையினால் நகர சபைக்கு ஐந்து சதத்தைக்கூட வருமானமாகப்பெறமுடியவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதன்காரணமாக சந்தைக்கட்டடத்தின் அமைக்கப்பட்ட பகுதியினை களஞ்சிய அறைக்காக வாடகைக்கு விடவும் இங்கும் வாராந்தம் பல்பொருள் அங்காடி நடாத்தியும் சபைக்கு வருமானத்தை ஈட்ட முடியுமென தெரிவித்து தவிசாளர் சபையின் அனுமதியைக் கோரினார்.
இக்கோரிக்கைக்கு சபையின் பிரதி முதல்வர் ஐ. அப்துல் வாசித், எஸ்எம். ஜெமீல், என். சுதாகரன், யுஎல்.சுலைஹா உம்மா, ஆரிபா கமால் மௌலானா, எஸ்எம். ஜப்பார், ஜி. சபிதா உம்மா, கே. ஐ. இப்திகார் ஆகிய எட்டுப்பேர் எதிர்ப்பு வெளியிட்டனர்.
தவிசாளர் எம்எஸ். சுபைர், எம்எஸ்.எம். றியால், யு.ஏ. றஸீது, எம்எஸ். அப்துல் கபூர், ஏஎம். சப்றா, ஐ. சதீஸ்குமார் ஆகிய ஆறு பேர் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தனர். எஸ். சுதாகராசா நடுநிலை வகித்தார்.
முன்னாள் தவிசாளர் எம்எஸ். நழீம் மற்றும் எஸ்எம் ஏ.எஸ்.எம் சறூஜ் ஆகியோர் சபைக்கு சமுகமளிக்கவில்லை.
சபை நடவடிக்கையின் இடைநடுவில் பிரதித்தவிசாளர் அப்துல் வாசித் சபைக்குத் தலைமை வகித்தார். அத்துடன் சபையின் முதிர்ந்த உறுப்பினரான யுஏ. றசீதுக்கும் சற்று நேரம் சபைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு தவிசாளரினால் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இச்சபை அமர்வு இறுதியானதாக அமைந்ததனால் உறுப்பினர்கள் பரஸ்பரம் முகமன்கூறி கடந்தகாலங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்களினால் எவருக்காவது மனம் நோகியிருப்பின் மன்னித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.