மட்டக்களப்பில் பல் உணவு அங்காடி திறப்பு

  1. உல்லாசப் பிரயாண துறையை ஊக்குவிக்கும் வகையிலும், மட்டக்களப்பின் பாரம்பரிய உணவுகளை சந்தைப்படுத்திக் கொள்ளும் நோக்கிலுமாக உலக வங்கியின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட பல் உணவு அங்காடியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது.

    நாட்டின் தற்கால பொருளாதார நெருக்கடி நிலமைகளை கருத்திற்கொண்டு உல்லாச பயணிகளை கவரும் விதத்தில் மட்டக்களப்பின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளை சந்தைப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக மட்டக்களப்பு மாநகர சபையானது, உலக வங்கியின் “உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின்” ஊடாக 8.5 மில்லியன் ரூபாய் செலவில் பல் உணவு அங்காடியினை  (Multi food center)  நிர்மாணித்திருந்தது.

    பல வகையான உணவுகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள கூடியதாகவும் உல்லாச பிரயாணிகளை ஈர்க்கும் வகையிலும்  அமைக்கப்பட்டுள்ள குறித்த அங்காடியினை மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

    இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதம கணக்காளர் திருமதி.ஹெலன் சிவராஜா, மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர்.சி.துஷ்யந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கிரிஜா பிரேம்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.