நான்காவது அகவையில் கால் பதிக்கும் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு.

என்றும் மக்கள் சேவையினை நோக்கிய பயணத்தில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் நான்காவது ஆண்டு விழா எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது காலை 7:00 மணிக்கு சூரியகந்தை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜையினை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு இ/எம்பி எக்பர்த் தமிழ் மகா வித்தியாலய க.பொ. த.சாதாரண தர மாணவர்களுக்கும் இ/எம்பி ஹேய்ஸ் தமிழ் வித்தியாலய க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்குமான இலவச கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து மாலை 3 மணியளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 19.03.2023 அன்று மலையக தோட்டப்புற இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாக பலாங்கொடை இணைப்பாளரின் ஏற்பாட்டில் சிசில்டன் தோட்ட இளைஞர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெறவுள்ளது.

பல்வேறு தடைகளை கடந்த புதிய பரிணாமங்களுடன் நான்காவது ஆண்டில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு கால் தடம் பதிக்கிறது.

பல சவால்களை வெல்லும் சமூகம் என்று எண்ணக்கருவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி திரு.ஆர்.ரமேஸ்வரன் அவர்களினால் கொவிட்-19 குழு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

மக்களுக்கு பல்வேறு வகையில் நிவாரணங்களை வழங்கும் விதமாக செயற்பட்டு வருவதனால் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற வகையில் கல்விக்கு கரம் கொடுப்போம் தோட்டப்புறமெங்கும் வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் உன்னதமான கல்விப்பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இரத்தினபுரியை தளமாக கொண்டு செயற்பட்டாலும் கூட மாகாணம், மாவட்டம் கடந்து இலங்கை முழுவதும் மலையக மக்களுக்காக உன்னதமான பணிகளை முன்னெடுத்து வருகிறது.

மேற்குறித்த அமைப்பின் தலைவர் திரு.ரமேஸ்வரன், பிரதி தலைவர் திரு. கே.சிவசுப்பிரமணியம், செயலாளர் ஆசிரிய ஆலோசகர் திரு.தயாளன், பிரதி செயலாளர் ஆசிரியர் திரு.மனோகரன், ஊடகத்துறை இணைப்பாளர் திரு. அஜித் குமார், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு. விநாயகமூர்த்தி மற்றும் வர்த்தக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு. ஏகாம்பரம் ஆகியோர் உயர்மட்ட அங்கத்தவர்களாக இருந்து திறம்பட வழிநடாத்தி வருகின்றார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சேவைகள் அளப்பரியவை.

சமூக, கலை, கலாச்சார விடயங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டுமல்லாது மத்திய மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் வாழும் மலையக தமிழர்களுக்காகவும் உன்னதமான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

இதனைத்தொடர்ந்து சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள மாணவர்களிடையே விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில் “விஞ்ஞான தீபம்” என்ற செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்துக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்கு சிந்தனையுடன் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த நான்கு வருடங்களாக கைகோர்த்து தங்களுடைய பேராதரவுகளை வழங்கிய அனைவருக்கும் ஆர்வத்தோடும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்திற்காக முன்வந்து செயற்பட்ட அனைவருக்கும் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் நான்காம் ஆண்டு பூர்த்தி நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு அழைக்கின்றமை‌ குறிப்பிடத்தக்கது.