மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாளில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு.

தலவாக்கலை பி.கேதீஸ்
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில்  மனிதாபிமான உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு இலங்கை  தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

திராவிட முனேற்ற கழகத்தின்  தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா  “மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்” என்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  மலேஷியா நாடாளுமன்ற உறுப்பினர்  டடுக் ஸ்ரீ எம்.சரவணன், இ.தொ.கா வின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் சிங்கப்பூர்,  மொரிஷியஸ் நாடுகளின் பிரதிநிதிகளும் சுவிஸ் நாட்டிலிருந்து சமுக ஆர்வலர்  முனைவர் நா.அருள்ராசா (கல்லாறு சதீஸ்) உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான  அடிப்படையிலான உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் தி.மு.கவிற்கும் இடையில் பல தசாப்தங்களாக உள்ள வலுவான நட்பை நினைவுகூர்ந்தார்.  தமிழ் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து,உலக ரீதியில் போற்றப்படும் நலன்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, எதிர்காலத்திலும் சிறப்பாக ஆட்சி செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகவும், இலங்கை மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.