அரசு தேர்தலுக்கு பயப்படுகிறது! – முன்னாள் அமைச்சர் மு. கா. முக்கியஸ்தர் உதுமாலெப்பை கருத்து.

(வி.ரி. சகாதேவராஜா)

மக்கள் தம்மை நிராகரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தேர்தலை ஒத்தி வைக்க அரசாங்கம் பலவழிகளிலும் திட்டமிடுகின்றது .
என்ன நடந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலத்திற்குப் பிறகு மரச்சின்னத்தில் போட்டியிடுகின்றது. வெற்றி நிச்சயம்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான உதுமாலெவ்வை நேற்று அம்பாறை கச்சேரியில் வைத்து தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்..
இன்று மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகி வாழ வழியின்றி தவிக்கின்றார்கள். அரச உத்தியோகத்தர்கள் கூட வாழ முடியாத நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கின்றார்கள்.இந்த நிலையில் தேர்தல் அவசியமா?

தேர்தல் நடக்குமா இல்லையா என்பது ஒரு புறம் .ஆனால் அரசியல் கட்சி என்ற ரீதியிலே முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து சபைகளிலும் போட்டியிடுகின்றது. இந்த நாட்டிலே மேலும் ஒருமுறை எமது பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கின்றது .அதற்கு மக்கள் அனைவரும் ஆணை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அரசாங்கம் இந்த தேர்தலை ஒத்தி வைக்கலாம் என்ற நிலைப்பாடு பலருக்கும் இருக்கின்றது.

இருந்தபோதிலும் இந்த அரசாங்கத்திலே மக்கள் எதிர்நோக்கும் நோக்குகின்ற பிரச்சினைகளை எடுத்துச் சொல்கின்ற ஒரு களமாக பயன்படுத்தலாம். மக்கள் அரசாங்கத்தை நிராகரித்து விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கின்றது. எனவே தமிழ் பேசும் மக்கள் அம்பாறை மாவட்டத்திலே சமகால அரசாங்கத்துக்கு உரிய பதிலை வழங்க வேண்டும் .அந்த எதிர்ப்பை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.