அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகின்றது!

அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக நாளைய தினம் கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை நேற்றைய தினம் கூடும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றைய தினம் அரசியலமைப்பு பேரவை கூடாத நிலையில் நாளைய தினம் கூடவுள்ளது.

கடந்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

கலாநிதி பிரதாப் ராமானுஜன், கலாநிதி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷ் சமரரத்ன ஆகிய மூவருமே இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் நியமனத்துக்கு கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு பேரவைக்கு இதுவரை நியமிக்கப்படாத நிலையில், நாளைய கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.