மலரும் புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் மாற்றத்திற்கான ஆண்டாக அமைய வேண்டுகிறேன் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்படி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
உலக வாழ் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கடந்த ஆண்டு நாம் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தோம்.கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல விடுபட்ட எம்மை பொருளாதார நெருக்கடி ஆட்கொண்டது.
அதிலிருந்து மீண்டெழ ஒவ்வொருத்தரும் பெரு முயற்சி எடுத்து வருகிறோம்.
புது வருடத்தில் மாற்றத்திற்கான எமது முயற்சிகள் அனைத்தும் ஈடேறி பொருளாதாரத்தில் புது விடியலை நோக்கிப் பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
படிப்பினைகளை படிக்கற்களாக மாற்றும் எம் மக்கள் ; புத்தாண்டில் வளமான ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப இந் நாளில் உறுதிகொள்ள வேண்டும்.
2023ஆம் ஆண்டு நாடும்-மக்களும் அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவடைந்து வளமான வாழ்வையும்-நிலையான வளர்ச்சியையும் கொடுக்கும் ஆண்டாக அமையும் என நம்புகிறேன். இந்தப் புத்தாண்டில் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை மற்றும் மனச்சுமை ஆகியன குறைந்து செழிப்பான மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.என மேலும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.