(நூருல் ஹுதா உமர்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical பல்கலைக்கழகத்துக்கும் தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்று இணைய வழி ஊடாக இடம்பெற்றது.
இவ் உடன்படிக்கைக்கான முன்னெடுப்புக்களையும் தலைமைத்துவத்தையும் ரஷ்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் ஜனித்த ஏ லியனகே தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
இணையவழியில் குறித்த உடன்படிக்கையின் போது, ரஷ்யாவின் UI. Y. Yakovlev Chuvash State Pedagogical பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி விவகாரங்களுக்கான துணைப்பொறுப்பாளர் பேராசிரியர் இவனொவ் விளாடிமிர் நிகோலாவிக், தாளாளர் லீனா ஸ்வெட்லானா விக்டோரோவினா, அறிவியல் மற்றும் புதுமையான பணித் துறையின் தலைவர் கிரிலோப் அலக்ஸ்சான்டர் அலெக்சிவிக், ஆகியோரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர், எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி , பதிவாளர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வமைப்புடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது ஆசிரிய-மாணவ பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பாடநெறிகள், ஆசியர் மற்றும் மாணவர் பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றினைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதுபோன்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி ரஷ்யா, துருக்கி, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் எதிர்வரும் காலங்களில் மேலும் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி ஒப்பந்தமானது பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் மூன்றாவது ஒப்பந்தம் என்பதும் அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர் கல்வியினை சர்வதேச மயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.