தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா!

(நூருல் ஹுதா உமர்)

தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் (சிம்ஸ் கெம்பஸ்) பன்னிரண்டாவது வருடாந்த பட்டமளிப்பு விழா கல்லூரின் முதல்வர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவின் தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு முதுமாணி, இளமானி பட்டங்களை பெற்றவர்களுக்கும் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார். பட்டமளிப்பு விழாவின் பிரதான பேச்சாளராக அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், மலேசிய ஜெனோவாசி பல்கலைக்கழக பிரதி உபவேந்தருமான பேராசிரியர் கமால் கருணாதாஸ கலந்துகொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், தூதரகங்களின் பிரதிநிதிகள், கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். 15 வருடமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் கிளை நிறுவனங்களை கொண்டுள்ள இந்த தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரியிலிருந்து இதுவரை தொழிநுட்பம், முகாமைத்துவம், சமூகவியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் 6500 பேரளவில் கல்விகற்று வெளியாகியுள்ளமையுடன் அதில் 1500 மாணவர்கள் பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் முற்றிலும் இலவசமாக கல்விகற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.