பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் தயார் என்றால் பேசுவதற்கு நாங்கள் தயார் – எம்.ஏ.சுமந்திரன்

பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் தயார் என்றால் பேசி தீர்ப்பதற்கு நாங்கள் தயார் என்று கூறியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

வாழைச்சேனை,வவுணதீவு,ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்களும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தற்போது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு உள்ள பொருதார நெருக்கடி சூழ்நிலையில் வாங்கிய கடனை செலுத்தமுடியாத நிலையில் இனியெந்த நாடும் கடன்களை வழங்காத நிலையுள்ளது.

கடன் வழங்கவில்லையென்றால் நாங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கமுடியாது.பெரிய சிக்கல் நிலையேற்பட்டுள்ளது.

இந்த சிக்கல் நிலையிலிருந்து மீள்வதற்கு இந்த நாடு தொடர்பில் நல்ல பிரதிபலிப்பினை காட்டவேண்டியுள்ளது.அந்த நாடுகள் அழுத்தங்களை வழங்கியுள்ளது.இதுவரை காலமும் சமமாக நடாத்தப்படாத தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.அவர் இதனை விரும்பிச்சொல்லவில்லை.சில அழுத்தங்கள் காரணமாகவே கூறியுள்ளார்.

பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் தயார் என்றால் பேசி தீர்ப்பதற்கு நாங்கள் தயார் என்று கூறியுள்ளோம்.பேசமுடியாது என்று சொல்லமுடியாது.

எங்களது அரசியல் கட்சி தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான தீர்வு என்ன என்பதில் கொள்கையினைக்கொண்டுள்ளது.1949ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அந்த கொள்கையுடனேயே இன்றும் பயணிக்கின்றது.அந்த தீர்வுக்காகவே தமிழ் மக்கள் எங்களுக்கு ஜனநாயக ரீதியாக வாக்களித்துள்ளனர்.இடையில் ஒரு காலத்தில் தனிநாட்டுக்காகவும் வாக்களித்துள்ளனர்.

ஜனநாயக ரீதியாக எங்களுக்கு மக்கள் அளித்த வாக்குகளைக்கொண்டு அதே தீர்வினை அடிப்படையாக கொண்டு நாங்கள் பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளோம்.இந்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடியுமா?,தோல்வியில் முடியுமா என்று பலர் பலவாறு எழுதுகின்றனர்.எவ்வாறு இருந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேயாகவேண்டும்.

எங்களது கோரிக்கையில் எந்த மாற்றத்தினையும் செய்யவில்லை.அதனை தெளிவாக வைத்து பேசுகின்றோம்.

தற்போது அரசாங்கத்திற்கு அழுத்தம் இருக்கின்றது.அரசாங்கத்திற்கு அழுத்தம் இருக்கின்றபோதுதான் அரசாங்கம் எதனையும் செய்ய நினைக்கும்.இருக்கும் அழுத்தங்களை கொண்டு பேச்சுவார்த்தைகளை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.” என தெரிவித்தார்.