சரியான பாதையை அமைக்காமல் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது அரசாங்கம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

எந்த திசையில் செல்லப்போகின்றோம் என்ற அறியாமையுடன் இலங்கை அரசாங்கம் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டிற்கான வரைபடத்தை வகுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி டிசம்பரில் வரும், ஜனவரியில் வரும் அல்லது மே, ஜூன் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் சரியான கணிப்பை வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் 3 பில்லியன் டொலர் உதவியை நாடு தவறிவிட்டால், எப்படி உயிர்வாழ்வது மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்ற திட்டம் அரசாங்கத்திடம் இருக்கும் என்றும் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரத்திற்கான ஒருங்கிணைந்த திட்டம் இல்லை என்பதே இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.