2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.
இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்படி, காலை 09:30 முதல் 10:45 மணி வரை இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க நேரம் ஒதுக்கப்படுவதோடு அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகு 11:15 மணிக்கு முதலாவது வினாத்தாள் வழங்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சார்த்திகளுக்கு முன்னரைப் போன்று அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு காலை 8.45 மணிக்கு முன்னர் வருகைதந்து அங்குள்ள படிவத்தில் கையெழுத்திடுவது அவசியமாகும். அத்துடன் பரீட்சை சுட்டெண்னை தெளிவாகத் தெரியும்படி ஆடையில் அணிந்து வருவது கட்டாயமாகும்.
பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்குமாறு உரிய அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்தி கொடுப்பது பெற்றோரின் கடமையாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த வருடம் 3 இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்கள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.