துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு: பெப்ரவரியில் மனுக்கள் பரிசீலனை!

ஜனாதிபதி பொதுமன்னிபில் துமிந்த சில்வாவை விடுவித்து கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில்நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அனைத்து தரப்பினரதும் பரிசீலனைகளை கருதிக்கொண்டு நீதிமன்றம் பெப்ரவரி 7ஆம் திகதி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு கடந்த 2021 ஜூன் 24 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரோடு பலர் குற்றவாளிகள் என அறிவித்து கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.