ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை : இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா !

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதன்படி தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த பொறி முறையைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் மொஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடைமுறை முன்னதாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் டொலர் பற்றாக்குறை உள்ள நாடுகளை இந்த பொறிமுறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் பொறிமுறையை அமைத்தது.

அதன்படி இந்திய மத்திய வங்கி, ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகத்திற்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளை திறக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மேற்கூறிய நாடுகளை தவிர மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கையுடனான வர்த்தகத்திற்கான ஐந்தும் மொரிஷியஸ் உடனான வர்த்தகத்திற்காக ஒன்று உட்பட ஆறு கணக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை எண்ணை வளம்கொண்ட சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட பெரிய வர்த்தக பங்காளிகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மதிப்பாய்வு செய்வது குறித்து இந்தியா தொடர்ந்து விவாதித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.