தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே சிறந்தகாலகட்டம் – ராஜித சேனாரத்ன

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே சிறந்தகாலகட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தேடும் முயற்சியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியே கடந்த காலங்களில் குழப்பி வந்தது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் 13 பிளஸ் எனக் கூறியபோது, அதனை மஹிந்த எதிர்த்ததாகவும், ஆனால் இன்று மஹிந்த ராஜபக்சவைக்கூட 13 பிளஸ் என்ற நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சிறந்த மாற்றமாகும். அதனை பயன்படுத்தி இப்பிரச்சினையை தீர்த்துவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அன்று முதல் தான் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் இந்நிலைப்பாடு மாறப்போவதில்லை எனவும், வாக்கு வேட்டைக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதார நெருக்கடியை சமாளித்த அனுபவம் உள்ளது. 2002 இல் சரிவில் இருந்த பொருளாதாரத்தை அவர் மீட்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.