இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் – விஜயதாச ராஜபக்ச

இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறை ஒழுங்கு நீதியமைச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்போதும், காணாமல் போனோர் அலுவலகம் நீதி அமைச்சின் கீழேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள அனைத்து கோப்புகளையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான இழப்பீடாக ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

சொத்து இழப்பீடு குறித்தும் தற்போது பரிசீலித்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை இழந்த சுமார் 11 ஆயிரம் பேர் வடக்கில் இருந்ததாகவும், அவற்றை மீண்டும் பெற்றுக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நீதியமைச்சின் கீழ் வட மாகாணத்தில் பல இணக்கப்பாட்டு மத்தியஸ்த நிகழ்வுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தற்போதும் செயற்பட்டு வருகிறது.

இவ்விடயத்தில் தங்களுக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் ஆதரவளித்து வருகின்றது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.