ஆழ்கடலுக்கு மீன் பிடித் தொழிலுக்காகச் சென்ற மீன்பிடி இயந்திரப் படகொன்று விபத்துக்குள்ளானதாக வாழைச்சேனை மீன்மிடி துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் விஜிதரன் தெரிவித்தார்.
குறித்த படகானது ஹம்பாந்தோட்டை கடலில் இருந்து சுமார் 190 கிலோ மீற்றர் தூரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களால் விபத்துக்குள்ளான படகிலிருந்த மீனவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆர்.பௌசர் வயது (36) என்ற மீனவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு பிறந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த என்.எம்.றியாஸ் வயது (42) மற்றும் எம்.எஸ்.எம்.றியாஸ் வயது (30) ஆகிய இரு மீனவர்களை தேடும் பணியில் கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காற்றின் வேகம் கடல் கொந்தழிப்பு காரணமாக தாம் பயணித்த படகு கவிழ்ந்துள்ளதாகவும் தன்னுடன் பயணித்த இருவரது நிலமை தெரியவில்லை என்றும் மீட்கப்பட்ட மீனவர் தகவல் வழங்கியுள்ளார்.