(பாரூக் ஷிஹான்)
5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இரவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மகாஓயா இலங்கை வங்கிக்கு அருகில் வைத்து 3 சந்தேக நபர்கள் 5 கஜமுத்துடன் திங்கட்கிழமை (12) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைதானவர்கள் பிபிலை பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக முச்சக்கரவண்டியில் கடத்தி சென்ற நிலையில் விசேட அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் 53, 34 , 36 வயதுடையவர்களாவர். மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஆகியன மகாஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தவிர கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தேடுதல் நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேராவின் ஆலோசனைக்கமைய களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை பதில் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.