(எம்.எம்.அஸ்லம்)
கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் தனியார் பஸ்களையும் தரிக்கச் செய்வதில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த சர்ச்சை மாநகர முதல்வரின் தலையீட்டினால் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக பஸ் நிலையத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்ட மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இரு தரப்பினரதும் கோரிக்கைகளை உள்வாங்கி, எவருக்கும் பாதகமில்லாத வகையில் இட ஒதுக்கீடுகளை மேற்கொண்டதன் மூலம் இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக முதல்வர் செயலகம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் இரு பிரிவு பஸ்களையும் நிறுத்துவதற்கான இடங்கள் முதல்வரின் நேரடிக்கண்காணிப்பில் வெள்ளைக் கோட்டினால் அடையாளப்படுத்தப்பட்டு, இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது பாதசாரிகள் மற்றும் பயணிகளுக்கும் மாநகர சபை மற்றும் பொது நூலகத்திற்கும் வாகன போக்குவரத்துகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பொலிஸ் வீதியில் பஸ்களை நிறுத்தும் செயற்பாட்டை தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை, இதன்போது முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கமைவாக அவற்றுக்கும் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் மாநகர முதல்வரினால் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்வர் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இக்களப்பணியில் முதல்வருடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அமீர், மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.