ஊடகவியலாளர் திருக்கோவில் ஈழகவி கார்த்திகேசுவின் கடிகாரப்பறவைகள் கவிதை நூல் வெளியீட்டு விழா

(வி.சுகிர்தகுமார்)

மகாகவி பாரதியாரின் 140ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு அம்பாரை மாவட்ட திருவதிகை கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முதலாவது நூலாக வெளிவரும் திருக்கோவில் ஈழகவி கார்த்திகேசுவின் கடிகாரப்பறவைகள் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

அபிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளரும் சமூக ஆர்வலரும் கவிஞருமான திருக்கோவில் கார்த்திகேசுவின் படைப்பில் உருவான சிறப்பு கவிதை நூலே இவ்வாறு வெளியீடு செய்து வைக்கப்பட்;டது.

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதின பணிப்பாளரும் ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தருமான கண இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நீ.அங்குசநாதக்குருக்கள் ஆன்மீக அதிதியாக கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தவிசாளர் இ.வி.கமலராஜன் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எஸ்.குணபாலன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் விசேட அதிதிகளாகவும் திருக்கோவில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ரி.மோகனராஜா பாவேந்தல் பாலமுனை பாறுக் கலாசார உத்தியோகத்தர் நிறோஜனி நவநீதன் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வ.மதனசீலன் வ.ஜயந்தன் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் வே.வாமதேவன் திருஞானவாணி முத்தமிழ் இசைமன்ற தலைவர் ஆ.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இலக்கிய அதிதிகளாக கலாபூசணம் திருமதி யோகா யோகேந்திரன் கலாபூசணம் நடேசு தயானந்தம் கலாபூசணம் ஜெகதீஸ்வரி நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிதிகள் வரவேற்பு மங்களவிளக்கேற்றல் இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையினை ஓய்வுநிலை அதிபர் எஸ்.பி.நாதன் வழங்கினார். தலைமையுரையினை கண இராஜரெத்தினமும் ஆசியுரையை சிவஸ்ரீ நீ.அங்குசநாதக்குருக்கள் வழங்க இலக்கிய சிறப்புரையை ஆய்வாளர் சிராஜ் மசூர் எழுகவி எம்.ஜ.எம்.ஜெமீல் கவிஞர் க.கிருஸ்ணமூர்த்தி பாவேந்தல் பாலமுனை பாறுக் ஆகியோரும் நூல் அறிமுக உரையை சர்வதேச இலக்கிய செயற்பாட்டாளர் ரியாஸ் குரானாவும் நூல் ஆய்வுரையை கலாபூசணம் முல்லை வீரக்குட்டியும் நிகழ்த்தினர்.
இதேநேரம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதுடன் கவிதை நூலினை பிரதம அதிதி அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வெளியீடு செய்து வைத்தார்.

நிகழ்வில் திருக்கோவில் மண்ணின் முதல் பேராசிரியர் எஸ்.குணபாலன் மற்றும் ஓய்வுநிலை அதிபர் எஸ்.பி.நாதன் ஆகியோர் நூலாசிரியர் கார்த்திகேசுவின் ஏற்பாட்டில் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதேநேரம்; நூலாசிரியரின் இலக்கிய முயற்சியை பாராட்டி பலரும் இணைந்து நூலாசிரியர் ஈழகவி கார்த்திகேவிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சினம் வழங்கி கௌரவித்தனர்.

இறுதியாக ஏற்புரையினை நூலாசிரியர் ஏ.எஸ்.கார்த்திகேசு நிகழ்த்தினார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நூலாசிரியரின் முயற்சி மற்றும் அவரது கலை உணர்வை பாராட்டியதுடன் தமிழ் உணர்வுடன் எப்போதும் பயணிக்கும் அவரது இலக்கிய சேவை தொடர வாழ்த்துவதாகவும் அவரது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்.

இந்த நாட்டில் நிலவும் இக்கட்டான இச்சூழ்நிலையிலும் கார்த்திகேசு எடுத்துள்ள முயற்சியை பாரட்டுவதுடன் எதிர்காலத்தில் அவருக்கு பக்கபலமாக செயற்படுவதாகவும் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதியின் காலத்தில் எவ்வாறு இந்த நாடு செல்லப்போகின்றது எனும் கவலை தமிழ் மக்களின் மனதில் தோன்றி இருக்கின்றது. இதேநேரம் அரசியல் தீர்வு மற்றும் காலத்திற்கு காலம் தமிழ் மக்களின் விடிவிற்காக உருவாக்கப்பட்டு பெரும்பான்மை தலைவர்களால் கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்களே அதிகம் என்றார். ஆனாலும் 13ஆவது திருத்தச்சட்டம் ஒரளவு ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் சர்வதேசத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்டமே எனவும் இனிவரும் காலங்களில் செய்யப்படும் ஒப்பந்தங்கள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் மேற்கொண்டால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.