வேலுகுமார் மக்கள் ஆணை இல்லாத அரசுடன் இணையமாட்டார்-இராதாகிருஷ்ணன்

வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்றும் குளோபல் கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா நுவரெலியாவில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் “தமிழ் முற்போக்கு கூட்டணியில் தற்போது உள்ள ஐவரும் பஞ்ச பாண்டவர்கள் போல் அண்ணன் தம்பிமார். எங்களுக்குள் ஏற்படும் சிற்சில பிரச்சினை அண்ணன், தம்பிமாருக்கிடையில் ஏற்படும் குடும்ப பிரச்சினைபோன்று தான். அதனை நாம் எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வோம்.

அந்த வகையில் இப்பிரச்சினையும் விரைவில் தீரும் இணைந்து பயணிப்போம். ஜனநாயக கட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள்தான் அமைப்பை சரியாக வழிநடத்த உந்துசக்தியாக அமையும் என்றே நம்புகின்றேன்

தான் எடுத்த முடிவு சம்பந்தமாக வேலுகுமார் எமக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அதேவேளை இனப்பிரச்சினைக்கான சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக எமக்கும் ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார் அந்த சந்திப்பில் நாமும் பங்கேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.