டொலரை ஈட்டும் கடலட்டைப் பண்ணைகளால் உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு-அங்கஜன் எம்.பி சுட்டிக்காட்டு.

(த.சுபேசன்)

வெளிநாட்டு டொலருக்கு ஆசைப்பட்டு கடைசியில் எம்மிடம் உள்ள கடல் வளத்தையும் அழிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 06/12 செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாயம் மற்றும் மீன்பிடி தொடர்பான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

வடக்கு மாகாணத்தில் தான் நாட்டின் மூன்றில் ஓர் பகுதி கடல் வளம் காணப்படுகிறது. ஆழ் கடல், குடாக்கடல், தரவைக் கடல் மற்றும் தீவுப்படுக்கைகள் என சகல வளங்களும் வடக்கில் உள்ளன.இந்த இயற்கையின் கொடைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எமது உள்ளூர் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இன்று நாட்டுக்கு டொலரை ஈட்டிக் கொடுக்கும் கடல் அட்டைப் பண்ணைகள் வடக்கு மாகாணத்தில் வெகுவாக அதிகரித்துள்ளன.

கடலட்டைப் பண்ணைகளால் கரையோர வளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு எமது மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது.
கடலட்டைப் பண்ணைகளால் கண்டல் தாவரங்கள் அழிவடைகின்றது.இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிப்படைகிறது.

இதுவரை வடக்கில் 616 ஏக்கர் கடல் பகுதியில் கடலட்டை உற்பத்தி இடம்பெற்று வருகின்றது.

0வருடங்களுக்கு முன்னராக உள்ளூர் தொழிலாளர்கள் எமது கடல்களில் இயற்கையாக கடல் அட்டைகளைப் பிடித்து சந்தைப்படுத்தினார்கள். அதனால் எமது வளங்கள் பாதிப்படையவில்லை. ஆனால் இன்று அதிகம் ஆசைப்பட்டு உள்ள வளங்களையும் இழக்கும் நிலை காணப்படுகிறது.

எனவே தான் எமது மீனவர்கள் இலவன்குடா- கிராஞ்சி மற்றும் பருத்தித்தீவுப் பகுதிகளில் தமது வாழ்வாதார உரிமைகளை வென்றெடுக்க கடலட்டைப் பண்ணைகளை எதிர்த்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்கள் வளங்களைப் பாதுகாத்த எமது மக்களுக்கு துரோகம் இழைக்காமலும்-எமது வளங்களை அடுத்தவருக்கு தாரை வார்க்காமலும் இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்த முடியும்.இதனை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.