மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 354மாணவர்கள் இடைவிலகல்

(பெருநிலத்தான்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 2021ம் ஆண்டில் 354மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக வலய மாணவர் இடைவிலகல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மொத்த மாணவர் தொகையில் 2.65வீதமான மாணவர்கள், அவ்வருடத்தில் இடைவிலகியிருக்கின்றனர்.

இதில் தரம் 10ல் கல்வி கற்கும் போதே அதிகமான மாணவர்கள் இடைவிலகியுள்ளமையை அவதானிக்க முடிந்தது. 2021இல் குறித்த தரத்திலிருந்து 106 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். அவர்களுள் ஆண்மாணவர்களே அதிகமாக இடைவிலகியுள்ளனர். குறித்த ஆண்டு அறிக்கையின் அடிப்படையில் 236ஆண் மாணவர்களும், 118பெண் மாணவர்களும் இடைவிலகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு தொடக்கம் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2585மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியிருக்கின்றமை துர்ப்பாக்கியமானது.
பெற்றோரின் உந்துதல், அக்கறையீனமாகவே குறித்த வருடத்தில் 55 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், குடும்பத்திற்காக சம்பாதிக்கும் பொருட்டும், கற்றலுடன் ஒத்துழைக்க முடியாமையினாலும், நோய்யுள்ளிட்ட காரணங்களினாலும் அதிகளவான மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.