(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
சைகை மொழியினைப் பயன்படுத்தும் செவிப்புலனற்ற வாய்பேசமுடியாத விசேட தேவையுடையோருக்கு பாராளுமன்ற தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்கப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பாக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பாராளுமன்றத்திற்கு முன் மொழிவுகளை சமருப்பிக்கும் நோக்குடுன் மாவட்ட ரீதியாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பில் துறைசார்ந்தோரிடமிரந்து கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளும் கலந்துரையாடல் அன்மையில் நடாத்தப்பட்டது. இதன்போதே இக்கோரிக்கை சைகைமொழியினைப் பயன்படுத்தும் செவிப்புலனற்ற விசேட தேவையுடையோரால் முன்வைக்கப்பட்டது.
நாட்டில் சைகை மொழியினைப் பயன்படுத்தும் விசேட தேவையுடையவர்கள் கனிசமானவர்கள் உள்ளனர். இவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்ளவென பாராளுமன்றத்தில் உறுப்புரமை ஒன்று தேவைப்படுகின்றது. இதற்காக எதிர்வரும் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியலினூடாக உறுப்புரிமையினை பெற்றுக் கொள்ள நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைவாழ் செவிப்புலனற்றோர் சாரபாக இக்கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவாவிடம் விடுக்கப்பட்டது.