வைத்தியசாலை தகவல்களை கணினிமயப்படுத்தும் திட்டத்தில், பொத்துவில் வைத்தியசாலையும் உள்ளீர்ப்பு

(ஆதம்)

டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளின் தகவல்களை கணனிமயப்படுத்தும் பொருட்டு, விஷேட வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

மேற்படி திட்டத்தில், பொத்துவில் ஆதார வைத்தியசாலையும் உள்ளீர்க்கப்பட்டுள்ளதால், அவ்வைத்தியசாலையின் சுகாதார தகவல்கள் கணனிமயப்படுத்தப்படவுள்ளன.

குறித்த இவ்வேலைத்திட்டத்தை பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பி.ஏ.வாஜித், கிழக்கு மாகாண சுகாதார தகவல் தொழிநுட்பவியல் விஷேட வைத்தியர் டொக்டர் ஐ.எம்.முஜிப், பொத்துவில் ஆதார வைத்தியசாலை தர முகாமைத்துவ பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நோயாளர் பதிவு, மருந்து விநியோகம், இரத்தப் பரிசோதனைகள், கதிரியக்க சேவைகள் என நோயாளர்களின் சகல தகவல்களையும் கணனிமயப்படுத்தி மிகக் குறுகிய நேரத்தில் சேவை வழங்குவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இலங்கையில் உள்ள சகல தள வைத்தியசாலைகளும் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கணினிமயப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.