நிதி மேசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மஹிந்த ராஜபக்ஷ அலுவலகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் படங்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திலினி பிரியமாலி கலந்து கொண்ட நிகழ்வில் ஷிராந்தி ராஜபக்ஷ பங்கேற்ற புகைப்படம் வெளியானது, ஆனால் அது திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கான வெளியீட்டு விழாவில் திருமதி ராஜபக்ஷ கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் திருமதி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.