மட்டக்களப்பு மாநகரசபையின் 65வது சபை அமர்வு…

(சுமன்)

மட்டக்களப்பு மாநகரசபையின் 65வது சபை அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர்கள், பிரதி ஆணையாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், முதல்வரின் சிபாரிசுகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், நீண்டகால குத்தகை விடயங்கள், மாநகர சபையில் உள்ள இரும்புக் கம்பிகளை விற்பனை செய்வதற்கான விலை நிர்ணயம் மற்றும் அனுமதி, உரிமையாளர் உயிருடன் இல்லாத பொதுச்சந்தை ஆயுள் குத்தகைக் கடைகளை மீளப் பொறுப்பேற்று கேள்வி கோரி வழங்குவது போன்றன தொடர்பாகவும் ஆரயப்பட்டது.

அத்துடன் தாமதமாகுகின்ற மட்டக்களப்பு நூலக வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு மாநகரசபையூடாக மேலும் 145 மில்லியன் நிதி ஒதுக்கத்தினை மேற்கொள்வதற்கான மாநரசபை அனுமதிக்கான பிரேரணையும் மாநகர முதல்வரால் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் மாநகர முதல்வர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு பொது நூலகத்தின் நிர்மாணப்பணிகளை முழுமைப்படுத்துவதற்கு தேவையான நிதியினை வழங்குமாறு தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே ஓரு அரசியல்வாதியினால் முறையான அனுமதிகள் எவையும் பெறப்படாமலும், உரிய நிதி ஏற்பாடுகள் இன்றியும் மட்டக்களப்பு பொது நூலகமானது அடிக்கல் நடப்பட்டு ஆரம்ப வேலைகள் நடைபெற்ற நிலையில் 2012 ஆம் ஆண்டில் அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு நாம் மாநகர சபையின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற வேளை இடைநடுவில் விடப்பட்ட குறித்த பொது நூலகக் கட்டிடத்தை முடிவுறுத்த வேண்டும் எனும் நோக்கில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம்.

குறிப்பாக பாராளுமன்ற அனுமதி, அமைச்சரவை அனுமதி மற்றும் தேசிய திட்டமிடல் அதிகார சபையின் அனுமதி என்பன பெறப்படவேண்டியிருந்தது. அவைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் தொடர் முயற்சியால் பெற்றதோடு, அமைச்சரவை அனுமதியினை 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி பெறக்கூடியாதாகவும் இருந்தது.

இதன்பின் 345 மில்லியன்கள் மதிப்பிடப்பட்டு, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகல்லாகம ஊடாக மாகாணசபை நிதியிலிருந்து 100 மில்லியன்களும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக 100 மில்லியன்களும் ஒதுக்கப்பட்டு நிர்மாணப் பணிகளுக்காக 2019 ஆம் ஆண்டு தேசிய கட்டிடங்கள் திணைக்களத்துக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது.

தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தினால் ஒப்பந்தம் கோரப்பட்டு ஒப்பந்ததாரர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், ஈஸ்டர் குண்டு தாக்குதல், ஜனாதிபதி தேர்தல் போன்ற காரணங்களால் இழுபறி நிலை காணப்பட்டு ஒப்பந்ததாரருக்கான அமைச்சரவை அனுமதி காலதாமதமாகிய காரணத்தினால் 2019 இல் ஆரம்பிக்கப்பட வேண்டிய வேலைகள் 2020ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது ஆளும் கட்சிக்கு சார்பான அரசியல்வாதி ஒருவர் பொது நூலகத்திற்கு தானே நிதியினை கொண்டு வந்து மீண்டும் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகப் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.

தற்போது, போலிப் பிரச்சாரங்களில் கூறப்பட்டது போல் இன்றைய ஆளும் தரப்பினர்களால் எவ்வித நிதி ஒதுக்கீடுகளும் கிடைக்கப்பெறவில்லை என்றும், ஏற்கனவே கிடைக்கப்பெற்ற 200 மில்லியன் ரூபாய் நிதிக்குரிய வேலைகள் மாத்திரமே கிடைத்து அந்நிதியிலேயே மிகுதி வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அதனைப் பூரணப்படுத்துவதற்கு 145 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் அதனை மாநகர சபையே பொறுப்பேற்று வழங்க வேண்டும் என்றும் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

எனவே பொது மக்களுக்கு பயனளிக்கக் கூடிய மேற்படி பொது நூலகத்தினை நிறைவு செய்து அவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் வகையில் உடனடியாக இதற்குரிய நிதி ஏற்பாடுகள் மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கமைய வெகு விரைவிரைவில் உரிய நிதி ஒழுங்குகள் எம்மால் செய்து கொடுக்கப்படும். அதேபோல் இதை முழுமையாக கண்காணித்து அமுல்படுத்தும் நிறுவனமான தேசிய கட்டிடங்கள் திணைக்களம் அந்த கட்டிட வேலைகளை எங்களுக்கு முறையாக முடிவுறுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் வெபர் மைதானத்தில் வெளிமாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் வந்து தங்கி நிற்பதற்கான விடுதி அமைப்பொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜ் அவர்களினால் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டு சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் வெபர் மைதானத்தில் நிலவுவகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒருநாள் வேலைத்திட்டம் என்னும் அடிப்படையில் மாநகர பிரதி ஆணையாளர் மற்றும் விளையாட்டுக் குழுவின் தலைமையில் குழுவொன்று நியமித்து அன்றைய தினம் அனைத்து வித குறைபாடுகள் தொடர்பிலும் ஒரு திட்டத்தினை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையின் பாதுகாப்பு கருதி வாயிற் கதவு அமைத்தல் மற்றும் இறுதிக்கிரியை மேற்கொள்வதற்கான பீடம் அமைத்தல் என்பன தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் இரா.அசோக் அவர்களினால் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டு சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இறுதியில் மாநகரசபையின் வேலைப்பகுதியின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக உறுப்;பினர்;களால் மாநகரசபையின் பொறியியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் மாநகரசபையினால் மேற்கொள்ளப்படும் செயற்;திட்டங்கள் அனைத்தும் வேலைக் குழுவின் முழுக் கண்காணிப்பின் கீழ் அக் குழுவினால் நிரற்படுத்தப்பட்டு ஒரு ஒழுங்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.