விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் எதிர்வரும் செப்டெம்பர் 28 ம் திகதி  சர்வதேச ஆய்வு மாநாட்டை  நிறுவக வளாகத்தில் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன்  இந் நிகழ்வினை சிறப்புற நடாத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்  இதுவரை நான்கு சர்வதேச ஆய்வு மாநாடுகளை  ஒழுங்கமைப்புச் செய்து மிகவும் சிறப்பான முறையில்  நடாத்தியுள்ளதோடு இந் நிறுவகத்தை உலக அறிஞர்கள், ஆய்வாளர்கள், புலமையாளர்களின் பார்வைக்கும் உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிறுவகம் “உலகமயமாக்கல் சூழலில் பாரம்பரியக் கலைகள்”,“ போரும் போருக்குப் பின்னரான காலத்திலும்  தொட்டுணராப் பண்பாட்டின் கலை வடிவங்கள்”, “உள்ளுர் அறிவு முறைமைகள் மற்றும் தொட்டுணராப் பண்பாட்டின் மரபுரிமைகளைப்  பிரதானப்படுத்துவதன் முக்கியத்துவம்” , “பன்முகப் பண்பாட்டுக் கலைச் செயற்பாடுகள்” முதலான தொனிப் பொருள்களில் சர்வதேச ஆய்வு மாநாடுகளை நடாத்தியது. இவ்வருடம் (2022); “மாறிவரும் உலகின் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளலும் இனக்குழு சமூகத்தின் கலை பண்பாட்டுப் பெறுமானங்களை அடையாளப்படுத்தலும்” என்பதை மையப்பொருளாகக் கொண்டு ஆய்வு மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இனக்குழு சமூகமும் தமக்கென தனித்துவம் மிக்க கலை, பண்பாட்டு அடையாளங்களைக் கெண்டுள்ளது. உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தம்மையும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டிய தேவையினால் இனக்குழு சமூகம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கலை, பண்பாட்டுச் சிதைவுகளை எதிர்கொள்கிறது. எனவே இனக்குழு சமூகத்தின் கலை, பண்பாட்டு விழுமியங்களை அடையாளப்படுத்திப் பேணுவதையும் அதனை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இவ் ஆய்வு மாநாட்டில் தமிழகப் பேராசிரியர்களான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ர்p. அருட்செல்வி அவர்களும் பாண்டிச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவகத்தின்   மானிடவியல் துறையின் ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி. எஸ் பக்தவக்சல பாரதி அவர்களும்  ஆதார சுருதி உரைகளை (முநல ழேவந யுனனசநளள) நிகழ்த்தவுள்ளனர். இவ் ஆய்வு மாநாட்டுக்கு பிரதம விருந்தினராக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரே~;ட பேராசிரியரும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பேரவை உறுப்பினருமான  பேராசிரியர் பிறேமகுமாரடிசில்வா அவர்களும் கௌரவ விருந்தினராக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆய்வு மாநாட்டில்  உள்நாட்டு ஆய்வாளர்களின் 24 ஆய்வுகளும் மூன்று வெளிநாட்டு ஆய்வாளர்களின்  ஆய்வுக்கட்டுரைகளும்  முன்வைக்கப்படவுள்ளன. இசை, நடனம், நாடகம், இலக்கியம், பண்பாடு, சமூகவிஞ்ஞானத்துறை சார்ந்த  ஆய்வுகள் பலவும், பண்பாட்டு வெளியில் இசை, அரங்கும் சமூகமும், கட்புலமும் பண்பாடும், சதிராட்டமும் பன்முகத் தோற்றமும், இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், வாழ்வியலில் தொழில்நுட்பம் என்ற பொருண்மைகளில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் காலை 8.45க்கு அதிதிகளை வரவேற்றலுடன் ஆரம்பமாகி  அதிதிகள் உரை மற்றும் ஆதார சுருதி உரைகளும் இடம்பெறும் பன்மைத்துவக்கலாசாரப் பண்பாட்டம்சங்களை வெளிப்படுத்தும் இசை, நடனநிகழ்வுகளும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1 – 4 மணிவரை ஆய்வாளர்களின் ஆய்வுரைகள், கருத்துரைகள், கலந்துரையாடல்களுடன் கூடிய  புலமைசார் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம் மாநாட்டின் பிரதான சிறப்பம்;சமாக மாலை நேர நிகழ்வுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது நிறுவகம் கலை மற்றும்  பண்பாட்டம்சங்களைப் பயிற்றுவிக்கும் நிறுவகமாக அமைந்துள்ளமையால் எமது விரிவுரையாளர்களின் நெறிப்படுத்தல்களில் உருவான பல்வேறு கலை நிகழ்வுகளும் திறந்த வெளி அரங்கில் இடம்பெறவுள்ளமை சிறப்பிற்குரியது.   இந் நிகழ்வில் ஆக்க இலக்கிய படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் நெறியாளர்கள், விமர்சகர்கள், இயக்குனர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், கைவினையாளர்கள்  என சமூகத்தில் உள்ள புலமையாளர்கள், பயிற்சியாளர்கள், திறனாளர்கள் என அனைவரையும் இணைத்துக் கொண்டு ஒரு நிறைவானதும்,  கனதியானதும், ஆக்கபூர்வம் மிக்கதுமான  ஆய்வுகளும் ஆற்றுகைகளும் இச் சர்வதேச ஆய்வு மாநாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம் மாநாட்டின் இணைப்பாளாராக கலாநிதி. வானதி பகீரதன்; அவர்களும்  செயலாளராக திரு.உ.பிரியதர்சன்  அவர்களும் பொருளாளராக கலாநிதி தாக்சாயினி பரமதேவன் அவர்களும் செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கலாநிதி வானதி பகீரதன்

இணைப்பாளர்,  சர்வதேச ஆய்வு மாநாடு — 2022

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப்பல்கலைக் கழகம்.