படுவான் சமர், பருவகாலம் – 12 பனையறுப்பான் வசமானது கிண்ணம்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய படுவான் சமர் (பருவகாலம் – 12) பனையறுப்பான் வசமானது.

படுவான்கரை பிரதேச பண்பாட்டை தழுவிய தொனிப்பொருளில் வருடாந்தம் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்டம் இவ்வாண்டு கடந்த ஆனி 25,26ம் திகதிகளில் 28 கழகங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டி காஞ்சிரங்குடா நாக ஒளி, பனையறுப்பான் கஜமுகா அணியினருக்கு இடம்பெற்றது. இதன்போது 1:0 என்ற கோள் அடிப்படையில் பனையறுப்பான் கஜமுகா அணி வெற்றிபெற்று படுவான்சமரின் கிண்ணத்தை தனதாக்கியது.

கழக தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ சி.சந்திரகாந்தன், காவல்துறை பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர், கிராம அரச உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன், வெற்றிபெற்ற அணிகளுக்கு பணப்பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.