கிழக்குப்பல்கலைகழகத்தின் வேந்தராக பேராசிரியர் மா.செல்வராஜா

14.10.1948 அன்று முனைக்காட்டில் பிறந்து 20.10.1977இல் இதே கிராமத்தில் தனது முறைப்பெண்ணான குணலக்ஸ்மியை மணம்முடித்து படுவான்கரையின் கல்விமேம்பாட்டுக்காக 1979இல் தன்னுடைய கிராமத்திலேயே “ஆகுக ஆக்குக “என்ற தாரகமந்திரத்துடன் ஒளிக்கல்லூரி எனும் தாபனத்தை உருவாக்கியவர். தமிழில் முதலாவது முகாமைத்துவ கல்வியாளர் என்ற பெருமைக்குரிய பேராசிரியர் மா.செல்வராஜா கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதியால் இன்று (07.06.2022) நியமிக்கப்பட்டுள்ளார்.

தாழங்குடா றோமன் கத்தோலிக்க மிசன் தமிழ்கலவன்பாடசாலை, தாழங்குடா விநாயகர் வித்தியாலயம், மட்.சிவானந்தா வித்தியாலயம் போன்றவற்றில் கல்விபயின்று 1969இல்பேராதனைப்பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்ட இவர் 1974இல் கல்விமானியில் சிறப்புப்பட்டத்தைப்பெற்று வெளியேறினார்.

முதலாவதாக ஆசிரியப்பணியில் இணைந்துகொண்ட இவர் குருநாகல் பொல்ககாய முஸ்லிம் வித்தியாலயம் ,கொழும்பு மல்வானை அல்முபாறக் மத்தியகல்லூரி, கொழும்பு டி.எஸ் சேனநாயக்கா கல்லூரி,  மட். சிவானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும், தேசிய கல்விநிறுவகம் மட்டக்களப்பு ஆசிரியபயிற்சிக்கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

1981இல் இலங்கை கல்விநிருவாகப்பரிட்சைக்குத்தோற்றி நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப்பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்பின் கொழும்பு இந்துக்கல்லூரி அதிபராகவும் ,மட். சிவானந்தாவித்தியாலயத்தின் அதிபராகவும் கொத்தணிபாடசாலைகளின் அதிபராகவும் விளங்கினார்.

1988ற்குப்பிற்பாடு தேசியகல்விநிறுவகத்தில் இணைந்துகொண்ட இவர் இலங்கையின் கல்விவளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை செய்துள்ளார்.பல்வேறு பயிற்சித்திட்டங்களுக்காக பிரித்தானியா, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா,தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று பல பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்துள்ளார்.

கிழக்குப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக நியமனம் பெற்ற இவர் 1998இல் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக நியமனம் பெற்றபின்பு பல்கலைக்கழகத்தில் கல்வியல் துறை மலர்ச்சிபெற்றது.

முன்பள்ளி கல்வியில்இலங்கையில் சர்வதேச கல்விமுறையினை புகுத்திய பெருமை இவரையே சாரும் 2003இல் இஸ்ரேவேலில் உள்ள கோல்டா மேயர் சர்வதேச பயிற்சிநிலையத்தில் பயிற்சியினைப்பெற்று  அங்குள்ள கல்விமுறையினை இங்கும் அறிமுகப்படுத்தினார்.

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணக்கருவுடன் அவர் மேற்கொண்ட செயற்திட்டங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

கிழக்குப்பல்கலைகழகத்தில் இவரது முயற்சியினால் கல்வியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக இவரே நியமிக்கப்பட்டார்.

சமுகத்திற்காகவும் கல்விற்காகவும் இவர் ஆற்றிய சேவைகளுக்காக கௌரவ பதவியினை ஜனாதிபதி இவருக்கு வழங்கியுள்ளார்.